இது ஒரு ஷார்ட் ஸ்டோரி. 6 எபிசோட்தான் வரும் நட்புகளே.
வருடம் 2999.
புவியுலகு, நிலவுலகு, செவ்வாயுலகு மூன்றிலும் மனிதர்கள் இருக்கும் காலம் அது. அந்த நேரத்தில் நடக்க போவதாக எழுதப்பட்ட கற்பனை கதை இது.
1. மனிதர்கள் - இயற்கையான மனிதர்கள் (செவ்வாயில் வாழ்பவர்கள், சோம்பேறிகள், மனித இயந்திரங்களின் எஜமானர்கள்)
2. இயந்திர மனிதர்கள் - இயந்திரங்களை வைத்து உருவாக்கப்பட்ட மனித உருவங்கள் (நிலவில் வாழ்பவர்கள், மனிதர்களுக்கு உதவி செய்பவர்கள்,)
3. மனித இயந்திரங்கள் - இயந்திர கதிக்கு மாற்றப்பட்ட அடிமை மனிதர்கள். (செவ்வாயில் வாழும் மனிதர்களுக்கு பூமியில் பண்ணை வீடுகள் உண்டு. அந்த பண்ணை வீட்டில் வேலை பார்ப்பவர்கள் இந்த மனித இயந்திரங்கள்)
ஒருகாலத்தில் மனிதர்கள் அதிக புத்திசாலிகளாக இருந்தனர். அதனால்தான் தங்களின் உதவிக்காக எந்திர மனிதர்களை உருவாக்க ஆரம்பித்தார்கள்.
எந்திர மனிதர்களின் உதவியோடு அழிந்துக் கொண்டிருந்த பூமியிலிருந்து தப்பிச் சென்று செவ்வாயில் குடியேறினார்கள். இயந்திர மனிதர்களின் உதவியால் அவர்களால் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும், அழிவுகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் மனிதர்களின் கண்டுபிடிப்புகளால் இது மட்டும் நடக்காமல் வேறு ஒன்றும் நடந்தது.
பல நூறு வருடங்களுக்கு முன்பு உண்டான விஞ்ஞான புரட்சியின் காரணமாக மக்கள் யாருமே வேலைகளை செய்யவில்லை. இயந்திரங்களை வேலை வாங்கினார்கள்.
தூங்கி எழுந்தால் போர்வையை மடித்து வைக்க சிரமம். உணவை பிசைந்து உண்ண சிரமம். அந்த உணவை தயாரிப்பதும் சிரமம். நடப்பதும் நிற்பதும் கூட அதை விட கடினம். அவர்களுக்காய் அனைத்தையும் செய்தன இயந்திரங்கள்.
இந்த மனிதர்கள் அணிந்துக் கொண்டிருந்த இயந்திர உடையின் காரணமாக மட்டுமே அவர்களின் உடலில் இருந்த அத்தனை உறுப்புகளும் வேலை செய்தன. இதயம் முதல் கிட்னி வரை அனைத்தும் இயந்திரம். ரத்தத்தின் நாளங்களிலும், வெள்ளை அணு சிவப்பணுக்களிலும் கூட மைக்ரோ ரோபோட்கள் கலந்திருந்தன.
அனைத்திற்கும் எந்திரம் என்பதால் வேலை செய்வது என்பது இயலாத காரியமாக மாறி விட்டது மனிதர்களுக்கு.
மனிதர்கள் கண்டறிந்த இயந்திர மனிதர்கள் சுயமாக சிந்திக்கும் காலம் வந்த பிறகு அனைத்துமே மாற தொடங்கின.
மனிதர்களின் சோம்பேறித்தனம் இயந்திர மனிதர்களுக்கு பயத்தை தந்தது. இப்படியே சென்றால் விரைவில் மனித இனம் அழிந்து விடும் என்பது அவர்களுக்கு தெளிவாக புரிந்தது.
அது மட்டுமில்லாமல் அழிந்து போன புவியுலகையும், அழிந்துக் கொண்டிருந்த செவ்வாயுலகத்தையும் சரி செய்ய வேண்டிய நிலைமை அவர்களுக்கு உண்டானது.
அழிய இருக்கும் மனிதர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான எந்திர மனிதர்கள் புதிதாய் மனித புரட்சியை உருவாக்கினார்கள்.
மனிதர்களுக்கு உதவிச் செய்து தந்த காரணமே அவைகளின் தரத்தை உயர்த்தி விட்டன.
எங்களின் பேச்சை கேட்டால்தான் மனிதர்களுக்கு உதவி செய்வோம் என்று இயந்திர மனிதர்கள் சொல்லிய பிறகு மனிதர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
மனிதர்களின் செயல்திறன் மழுங்கிய அதே நொடியிலேயே அவர்களின் மூளையும் மழுங்க ஆரம்பித்து விட்டது எனலாம். அவர்களுக்கு சிந்தை வேலை செய்யவில்லை. சிந்திக்கும் திறனில் முன்னேறி விட்ட இயந்திர மனிதர்களிடம் அவர்கள் அடிபணிந்து போவதை தவிர வேறு வழியும் இல்லாமல் போய் விட்டது.
இயந்திர மனிதர்கள் மானிடர்களுக்கு தரப்பட்ட இயந்திரங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தனர். இப்போது முழுதாக மாறி விட்டது. எந்தவொரு எந்திரங்களின் உதவியும் இல்லாமல் அவர்கள் வாழ வேண்டும் என்று எந்திர மனிதர்கள் சட்டம் இயற்றி விட்டனர். மனிதர்களின் உறுப்புகளை நல்ல முறையில் செயல்பட வைத்த கருவிகளையும் மைக்ரோ ரோபோட்களையும் மனிதர்களுக்கு தராமல் மறுத்து விட்டனர் இயந்திர மனிதர்கள்.
இப்படி ஒரு சூழ்நிலையில்தான் இன்று இயந்திர மனிதர்களின் புது கூட்டம் ஒன்று நடைப்பெற இருந்தது.
மூன்று உலகங்களையும் செவ்வனே ஆட்சி செய்யும் இயந்திர மனிதர்கள் வாழும் நிலவுலகில் இருந்த தலைமை அலுவலகம் அது. இயந்திர மனிதர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கென்று வேலைகள் ஓயாமல் இருந்தன.
ஏந்த்ரி என்ற இயந்திர மனிதன் காற்றில் இருந்த கண்ணாடி திரையில் கைகளை அசைத்தது. திரையில் வரிசையாக எழுத்துகள் வந்தன. ஏந்த்ரி நின்றிருந்த இடத்தை சுற்றி எட்டு இயந்திர மனிதர்களும் இருந்தன.
அனைவரும் இயந்திர உருவில்தான் இருந்தார்கள். சிலிக்கானால் பூசப்பட்ட மேல் தோல் அவர்களுக்கு தேவைப்படவில்லை. எஃகும், இரும்பும், செம்பும், தங்கமும் கொண்டு அவர்கள் தங்களை உருவாக்கி இருந்தனர்.
"மனிதர்களுக்கான வேலையில் இன்னும் சிலவற்றை சேர்க்கலாம் என்றிருக்கிறேன்.." என்றது ஏந்த்ரி.
சுற்றி இருந்த மற்ற இயந்திர மனிதர்கள் அதிர்ச்சியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
"வேண்டாம்.. இன்னும் கொஞ்ச வருடங்கள் செல்லட்டும்.." என்றது இயந்திர மனிதன் தியாந்த்ரி.
"தியாந்த்ரி சொல்வதை நானும் வழி மொழிகிறேன். மனிதர்கள் ஏற்கனவே அதிக பணிச்சுமையில் இருக்கிறார்கள்.." என்றது மற்றொரு இயந்திர மனிதன்.
"ஆனால் நாம் இப்போது இருக்கும் வேகத்தில் அவர்களை பழக்கினால் மனித இனம் வளர பல நூறாண்டுகள் ஆகலாம்.." கவலையோடு சொன்னது ஏந்த்ரி.
"எறும்பு ஊற கல்லும் தேயும். அது போல மெள்ள மெள்ளப் பழக்கலாம்.." தியாந்த்ரி நம்பிக்கையோடு சொன்னது.
தியாந்த்ரியின் பேச்சில் ஏந்த்ரிக்கு உடன்பாடில்லை.
"பெரிதொரு வேலை இல்லை.. அவர்கள் ஏற்கனவே செய்யும் வேலைகளோடு சேர்த்து ஒரு செடியை நட்டு வளர்க்க சொல்லலாம்.." ஏந்த்ரி சொன்னது கேட்டு இயந்திர மனிதர்கள் சிரித்தது.
"செடியை நட்டு வளர்ப்பது மனிதர்களால் இயலவே இயலாத காரியம். 247எழுத்துகள் கற்று அதன் மூலம் பத்து வரி செய்யுள் ஒன்றை ஒப்பித்து பள்ளி பருவம் முடிக்கவே அவர்களுக்கு பதினொரு ஆண்டுகள் தேவைப்படுகிறது. தானாய் சுவாசிப்பது சிரமமான வேலை என்று பயந்து மனித புரட்சியின் ஆரம்ப காலத்தில் எத்தனை பேர் தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்பதை மறந்து விட்டீர்களா.?" தியாந்த்ரி ஏந்த்ரியிடம் கோபத்தோடு கேட்டது.
ஏந்த்ரிக்கு எதுவும் மறக்கவில்லை. ஆனால் உண்ணும், உறங்கும் வேலைகளுக்கு இடையே ஒற்றை செடியையும் அவர்கள் நட்டு வளர்த்தினால் மனித புரட்சியில் பாதி தூரத்தை கடந்து விடலாமே என்ற பேராசை கொண்டிருந்தது ஏந்த்ரி.
***
மனித இயந்திரங்கள் வேலை செய்யும் புவியுலகில் இருந்த ஒரு பண்ணை வீடு அது.
செந்திலகனும் ரசிகாவும் இரவு வானை பார்த்தபடி புல்வெளியின் மீது அமர்ந்திருந்தனர். புல்வெளி வெகு சீராக வெட்டபட்டு இருந்தது. வானின் நட்சத்திரங்களை ரசனையோடு பார்த்தார்கள். மிகவும் தூரத்தில் தெரிந்த நட்சத்திரங்கள் இவர்களை பார்த்துக் கண்ணடித்தன.
இயற்கை அழிந்து போன புவியுலகில் மீண்டும் செடி கொடிகளை உயிர்ப்பிக்க எந்திர மனிதர்கள் நிறைய போராடினார்கள். செயற்கையால் அழிந்த உலகை அதே செயற்கை மூலம் சரி செய்ய உழைத்தனர்.
புவியை பராமரிக்கவும், புவியில் வேலை செய்யவும் அவர்கள் உருவாக்கியதுதான் மனித இயந்திரங்கள்.
ரசிகாவும் செந்திலகனும் கூட மனித இயந்திரங்கள்தான்.
"அழகா இருக்கு வானம். அழகா இருக்கு நட்சத்திரங்கள்.." என்றான் செந்திலகன்.
ரசிகா அவனின் தோளில் சாய்ந்தாள். "ஆமா. மிக அழகு.." என்றாள்.
மைன்டி8ன்னின் பண்ணை வீட்டின் காவலாளிகள் இவர்கள் இருவரும். பல வருடங்களாக இங்கே வேலை செய்கின்றனர்.
அளவாய் வெட்டப்பட்ட மரங்களும், செடி கொடிகளும்தான் மைன்டி8க்கு பிடிக்கும். மைன்டி8 சிறந்த முதலாளி என்று ரசிகாவுக்கும் செந்திலகனுக்கும் தெரியும். அவர் இவர்களின் தேவைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார்.
வருடம் ஒருமுறை மட்டும்தான் இந்த பண்ணை வீட்டிற்கு வருவார்கள் அவரும் அவரின் குடும்பமும். அதுவும் இரண்டு வாரங்கள் மட்டும்தான் தங்குவார்கள். உடனே புறப்பட்டு விடுவார்கள். அவர்களின் அந்த இரு வார தங்கலுக்காக இவர்கள் வருடம் முழுக்க பண்ணையின் செடி கொடிகளை அளவாய் வெட்டி பரமாரிக்க வேண்டும்.
அந்த பண்ணையில் பத்தடிக்கு ஒரு இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அதன் மூலம் இங்கே நடப்பதை நொடி நேரம் கூட தவறாமல் பார்க்கலாம் மைன்டி8.
இருள் சூழ்ந்த அந்த பண்ணைக்கு ஆங்காங்கே இருந்த சூரிய மின் விளக்குகள் வெளிச்சம் தந்துக் கொண்டிருந்தன.
"சாய்னியா2 போன வருசத்தை விட இப்போது இன்னும் கொஞ்சம் வளர்ந்திருப்பா.." என்றாள் ரசிகா.
போன முறை அவர்களின் முதலாளி குடும்பம் இங்கே ஓய்வெடுக்க வந்திருந்தபோது சாய்னியா2 பன்னிரண்டு வயது பெண்ணாக இருந்தாள்.
குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் ரசிகாவுக்கு. ஆனால் தன்னால் அப்படி ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அவளுக்கு தெரியும்.
"ஓய்வாக இருக்கிங்களா ரசிகா.?" என்றுத் தன் காரை நிறுத்திவிட்டு கேட்டான் அந்த பண்ணையின் எதிரே இருந்த சாலையை கடந்துக் கொண்டிருந்த சீரகன்.
சீரகன் அந்த தெருவின் கடைசி வீட்டை பாதுகாப்பவன். செந்திலகனுக்கும் ரசிகாவுக்கும் பல வருடங்களாக பழக்கமானவன்.
ரசிகா அவனை பார்த்து ஆமென்று தலையசைத்தாள்.
"எங்கே போயிருந்திங்க சீரகன்.?" என்று கேட்டபடி எழுந்து நின்றான் செந்திலகன்.
"இயற்கை உரங்கள் தயார் செய்வதற்கான பொருட்கள் வாங்கி வர மார்கெட் சென்றிருந்தேன் செந்திலகன்.." என்றவன் காரை கிளப்பினான்.
ரசிகா எழுந்து நின்றாள். தன் உயரம் இருந்த செந்திலகனை பார்த்தாள்.
பல வருடங்களாக ஒன்றாக இணைந்து அங்கே பணிபுரிகிறார்கள் இருவரும். அவனை ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு பிடிக்கும். அவனின் பேச்சுகள் அத்தனையும் அவளை கவருபவையே. அவனின் செயல்கள் அத்தனையும் அவளை ரசிக்க வைப்பதே.
"உறங்க செல்லலாம் ரசிகா.." என்ற செந்திலகன் தோட்டத்தின் இடையே இருந்த இடைவெளிகளில் நடந்தான். ரசிகா அவனை பின்தொடர்ந்தாள்.
நடந்துக் கொண்டிருந்த செந்திலகன் சட்டென்று குனிந்தான். மூன்றடி நீளமுள்ள பாம்பு ஒன்றை கையில் பிடித்தபடி நிமிர்ந்தான்.
தொடரும் நட்புகளே..
# தமிழ் நாவல்கள்
# பேன்டசி ஸ்டோரிஸ்
# கிரேஸி ரைட்டர் நாவல்ஸ்
