"எங்களைத் தேடி வரலையே.." குழம்பிய அக்னிமித்ரன் "நீங்க இரண்டு பேரும்தானே போனிங்க? அவ எதுக்காக எங்களைத் தேடி வரணும்.?" என்று மதுரனிடமே திருப்பிக் கேட்டான்.
முகம் சுருக்கியவன் தலையில் ஒரு கரத்தை பதித்தான். "கூட்டத்துல மிஸ் ஆகிட்டா போல. நான்தான் இங்க வந்துட்டதா நினைச்சிருக்கேன்.." என்றான்.
"மித்ரா மிஸ் ஆகிட்டாளா.?" என கேட்ட மித்ரனுக்கு இதயம் ஏனோ அடித்துக் கொண்டது.
"எப்படி மிஸ்ஸானா? எங்கே மிஸ்ஸானா.?" என்று அவசரமாக கேட்டான்.
"பதறாதிங்க. பொறுங்க.. எப்படியும் இங்கதான் எங்கேயாவது இருப்பா. நான் போன் பண்ணா எடுக்கல.. இருங்க மறுபடியும் பண்ணி பார்க்கிறேன்.." என்ற மதுரன் அழைப்பு விடுக்க ஆரம்பித்தான்.
மித்ரனும் அவசரமாக கைபேசியை எடுத்து தங்கைக்கு அழைத்தான். ரிங் போனதே தவிர அவள் யாரின் அழைப்புகளையும் எடுக்கவில்லை.
"இவ்வளவு பெரிய கூட்டத்துல அவளை மிஸ் பண்ணிட்டிங்களா?" என கேட்டவன் கோபத்தில் மதுரனின் சட்டையை பிடிக்காமல் இருந்ததே பெரிய விஷயம்.
"அவ என்ன குழந்தையா? கண்டிப்பா திரும்பி வந்துடுவா. நீங்க பயப்படாதிங்க.." என்று சொல்லிவிட்டு அழைப்புகளை மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தான் மதுரன்.
"இவ ஏன் போனை கூட எடுக்க மாட்டேங்கற.?" என்று எரிச்சலானவன் வியர்த்த தன் பின்னங்கழுத்தை துடைத்துக் கொண்டான்.
இவனுக்கும் ஏனோ மனம் கலங்கியது.
"போனை தொலைச்சிட்டாளோ.?" மச்சானை பார்த்து கேட்டான் மதுரன்.
"தொலைஞ்சா என்ன போச்சி.? எப்படியும் வீட்டுக்கு போய் இருப்பாங்களே.." நீலவேணி இருவரையும் பார்த்துக் கொண்டு கேட்டாள்.
"நீ ஒன்னு பண்ணு. வீட்டுக்கு போ.. அவ அங்கே இருந்தானா உடனே எனக்கு போன் பண்ணு.." என்று நீலவேணியிடம் சொன்னான் மித்ரன்.
"நான் தனியா போகணுமா.?" அதிர்ந்தவளிடம் "பகல் மாதிரி வெளிச்சம் இருக்கு. இங்கே எதுவும் வராது. நீ பத்திரமா போ.." என சொன்னான்.
"அப்புறம் உன் தங்கச்சி மட்டும் பத்திரமா போயிருக்க மாட்டாங்களா.?" திருப்பி கேட்டாள்.
முகத்தை துடைத்துக் கொண்ட மித்ரன் "அவளுக்கு ஞாபகம் மறதி இருக்கு. இப்ப அவ காணாம போயிட்டான்னு சொன்னவுடனே எனக்கு அவளோட ஞாபக மறதிதான் பெரிய விஷயமா தோணுது. மறதியில எங்காவது வழிமாறி போய் இருப்பாளோன்னு பயமா இருக்கு. ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணு.." என்று கெஞ்சலாக கேட்டான்.
அவனைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அதனால் சரியென்று தலையசைத்த நீலவேணி "இவன் ரொம்ப கெட்டவன். உங்க தங்கச்சியை வேணும்ன்னே தொலைச்சிருப்பான்.." என்று மதுரனை பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
மதுரன் அவளை பார்த்து பற்களை கடித்தான்.
"நீங்க இவ மேல கோபப்படாதிங்க
அவளை எந்த இடத்துல மிஸ் பண்ணிங்கன்னு சொல்லுங்க. இரண்டு பேரும் சேர்ந்து தேடலாம்.." என்று சொல்லிவிட்டு நடந்தான் மித்ரன்.
கோவிலின் பின்னால் இருந்த புழுதி காட்டின் மத்தியில் வந்து நின்றான் மதுரன்.
"இங்கேதான் இரண்டு பேரும் சேர்ந்து நின்னுக்கிட்டு பட்டாசு பார்த்தோம். அப்ப பல்லக்கு ஊர்வலம் வந்தது. ரொம்ப கூட்டமா இருந்தது. ஊர்வலம் முடிஞ்ச பிறகு பார்த்தேன். அவளை காணல.." என்று சொன்னான்.
தங்கைக்கு இடைவிடாமல் போனில் அழைத்துக் கொண்டிருந்தவன் பல்லக்கு கூட்டத்தோடு சேர்ந்து தங்கையும் போய் இருப்பாளோ என்று சந்தேகம் கொண்டான்.
கோவிலை இருவரும் சேர்ந்து சுற்றினார்கள். ஆனால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை.
நீலவேணியிடமிருந்து அழைப்பு வந்தது. அவசரமாக காதில் வைத்தான் மித்ரன்.
"அவங்களை வீட்டுலயும் காணல.." என்று அவள் சொல்ல இவனின் பயம் கூடியது.
"சரி. நீ வீட்டிலேயே பத்திரமா இரு.." என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த மித்ரன் "உங்களுக்கும் அவளுக்கும் இடையில ஏதாவது சண்டை வந்ததா.?" என்று மச்சானிடம் சந்தேகமாக கேட்டான்.
அழகான கோவில் திருவிழா அது. மின் விளக்குகள் வானத்திலிருந்த நட்சத்திரங்களுக்கு போட்டியாக பூமியில் ஒளிவீசி கொண்டிருந்தன. எங்கும் மக்களின் கூச்சலும் குழந்தைகளின் சிரிப்பொலியுமாக இருந்தது. ஏதேதோ வாசனைகள் காற்றில் மிதந்து வந்தன. பூக்களின் வாசத்தையும் பூஜை பொருளின் வாசத்தையும் மிகவும் தெளிவாக அந்த காற்றில் கண்டறிய முடிந்தது.
எங்கு பார்த்தாலும் கூட்டம். சுற்றிலும் இருந்த காட்சிகளை பார்த்துக் கொண்டு சிலை போல நின்றிருந்தாள் மித்ரா.
தான் யார்? எதற்காக இங்கே நிற்கிறோம்? என்று அவளுக்கு புரியவில்லை.
ஆனாலும் அந்த இடத்தை வேடிக்கை பார்க்க அவளுக்கு பிடித்திருந்தது. அங்கேயே நிற்க வேண்டுமென்று அவளின் உள் மனம் எச்சரித்து கூறியது.
நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. வேறு ஏதோ ஒரு பிரபஞ்ச வெளியில் மாட்டிக் கொண்டது போன்ற ஒரு உணர்வில் இருந்தாள் மித்ரா.
அவளின் மூளைக்குள் இருந்த நரம்புகள் அவளின் ஞாபகத்தில் இருந்த மனித முகங்களை நினைவு படுத்தியது. ஆனால் அதைத் தாண்டி வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. அந்த மூளையில் காட்டப்படும் மனித முகங்கள் தனக்கு எவ்வகையில் சொந்தம் என்று கூட அவளுக்கு புரியவில்லை.
கொஞ்சம் பயமாக இருந்தது. நொடிகள் நகர நகர அந்த பயமும் அதிகமாக கூடியது.
அனைவருமே சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு பெரிய இடத்தில் தான் மட்டும் அனாதையோ என்ற எண்ணம் தோன்றியது மித்ராவுக்கு.
அவளின் கையில் இருந்த கைபேசி சத்தமின்றி வெளிச்சத்தை காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அவளால்தான் கைபேசியை பற்றி நினைக்க முடியவில்லை. செய்து வைத்து சிலை போல நின்று விட்டாள்.
"என் பெயர் என்ன.?" சில நிமிடங்களுக்குப் பிறகு தன்னிடமே கேட்டுக் கொண்டாள்.
ஆனால் மூளை பதில் பேச மறுத்தது. முகங்களை மட்டும் மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டிருந்தது. அந்த முகத்திற்கு உரிய மனிதர்கள் எங்கே என்று கண்களால் தேடினாள். அனைவருமே அன்னியர்களாக தென்பட்டார்கள்.
***
நாற்பது முறைக்கு மேல் அழைத்து விட்டான் மித்ரன். அவனின் கண்கள் இரண்டும் ஈரத்தை காட்டிக் கொண்டிருந்தன. மூச்சு விடும் பொழுது வெளியேறும் காற்று அழுகையின் ஆரம்பத்தை காட்டியது. மனம் தவித்தது. இதயம் பரபரத்தது.
'தங்கம்மா எங்கம்மா இருக்க? யாராவது கடத்திட்டு போயிட்டாங்களா? இல்லை எல்லாத்தையும் மறந்துட்டு எங்கேயாவது நின்னுட்டு இருக்கியா? அண்ணன் வருவேன்னு தேடிட்டு இருக்கியா.? தங்க குட்டி! அண்ணன் வர வரைக்கும் பத்திரமா இருடா. உன்னை கடைசியா எப்படி பார்த்தேனோ அதே மாதிரி மறுபடியும் கை சேர்ந்திடு.. உனக்கு ஏதாவது ஆச்சின்னா அப்புறம் நான் வாழுறதுல அர்த்தமே இல்லாம போயிடும்டா..' என்று மனதோடு அவளிடம் பேசினான். தான் பேசுவது நிச்சயம் அவளுக்கு கேட்கும் என்று நம்பினான்.
"சாரி நான்தான் கவன குறைவா இருந்துட்டேன்.." என்று வருத்தமுடன் சொன்னான் மதுரன்.
"நீங்க வேணும்ன்னு அவளை தொலைக்கல. பீல் பண்ணாதிங்க.." என்று சொன்ன மித்ரன் தங்கையை தேடி அலைந்தான்.
அந்த கோவிலை நான்கு முறை வலம் வந்து விட்டார்கள். மணியோ பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
"எங்கேயோ தொலைஞ்சிட்டா.." என்ற சொல்லிவிட்டு தலையை பிடித்தபடி அங்கிருந்த கல்மேடை ஒன்றின் மீது அமர்ந்தான் மித்ரன். அவனை பார்க்கும்போதே பயமாக இருந்தது இவனுக்கு.
விட்டால் கதறி விடுவேன் என்பது போலதான் அமர்ந்து கொண்டிருந்தான் மித்ரன்.
"போனையாவது எடுத்தான்னா ஆகும்.." என்ற மதுரன் "பேசாம மைக்ல அனவுன்ஸ் பண்ண சொல்லலாமா.?"
என்று கேட்டான் மித்ரனிடம்.
மித்ரன் நிமிர்ந்து பார்த்தான்.
"வேற வழி இல்ல. ஒரு பொண்ணை காணலன்னு சொல்லலாம்.."
"அப்புறம் எல்லோரும் என் தங்கச்சியை பைத்தியம்ன்னு நினைப்பாங்க.." மித்ரன் சொன்னது கேட்டு மதுரனுக்கு கோபம் வந்தது.
"மத்தவங்க நினைப்பு முக்கியமா? இல்ல மித்ராவை கண்டுபிடிப்பது முக்கியமா?" என கேட்டான்.
இவனும் யோசித்துப் பார்த்தான்.
இருவரும் பண்டிகை நடத்தும் விழா குழுவினரை நெருங்கவிருந்த நேரத்தில் மித்ரனுக்கு அழைத்தாள் நீலவேணி.
ஒருவேளை தங்கை வீட்டிற்கு சென்று விட்டாளோ என்று யோசனையோடு அவசரமாக அழைப்பை ஏற்றான்.
"கிடைச்சிட்டாங்களா.?" நீலவேணி கேட்டாள்.
"அவளை இன்னும் கண்டுபிடிக்க முடியல வேணி. தேடிக்கிட்டு இருக்கோம்.." என சொன்னான் இவன்.
"உங்க தங்கச்சியோட போனுக்கும் உங்களோட போனுக்கும் லொகேஷன் ஷேர் பண்ற மாதிரி நீங்க எதுவும் ரெடி பண்ணி வைக்கலையா.?" என்று கேட்டாள் அவள்.
அவள் சொன்னதை கேட்ட பிறகுதான் இவனுக்கு யோசனை வந்தது. வெகு நாட்களுக்கு முன்னால் இவனின் ஃபோனில் அதுபோல எதையோ தயார் செய்து வைத்திருந்தாள் மித்ரா.
அன்று அவள் அதைப்பற்றி சொல்லவும் செய்தாள். ஆனால் இவன்தான் அன்று பார்க்க வேண்டியிருந்த வழக்கின் நினைவில் அவள் சொல்ல வந்ததை காதில் கேட்டுக் கொள்ளவில்லை. அதன் பிறகு இவனும் அதைப்பற்றி மறந்து விட்டான்.
"தேங்க்ஸ் நீலவேணி.." என்று சொன்னான் மித்ரன்.
அழைப்பை துண்டித்து விட்டு தனது கைபேசியில் இருந்த அத்தனை செயலிகளையும் சோதிக்க ஆரம்பித்தான்.
"என்ன ஆச்சி.?" எனக்கேட்ட மதுரனிடம் தகவலை சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் தேடியவன் விரைவிலேயே லொகேஷன் ஷேரிங் ஆப் ஒன்றுக்குள் தனது தங்கையின் ஃபோனும் தனது போனும் இணைந்து இருப்பதை கண்டு விட்டான்.
இடது பக்கத்தில் இருபதடி தொலைவில் அவளின் போன் இருப்பதாக இவனின் கைபேசியில் இருந்த மேப் சொன்னது.
அவசரமாக ஓடினான்.
இவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தவள் அந்தப் பக்கமும் இந்த பக்கமுமாக பார்வையை அலைபாய விட்டுக் கொண்டிருந்தாள். குழந்தையைப் போலவே பரிதவித்திருந்தாள்.
"மித்ரா.." என்ற அக்னியின் குரலில் திரும்பினாள்.
அவளின் மூளையில் இருந்த முடிச்சி நொடி நேரத்தில் அவிழ்ந்து விட்டது.
"அண்ணா.." அழைத்தவள் தன் அருகில் வந்தவனை பாய்ந்து அணைத்தாள்.
தங்கையின் முதுகை கட்டிக்கொண்ட மித்ரன் "கொஞ்ச நேரத்துல என்னை எவ்வளவு பயமுறுத்த முடியுமோ அவ்வளவு பயமுறுத்திட்ட.." என்றான்.
அண்ணனின் மார்பு சட்டைக்குள் முகம் புதைத்து தன்னைதானே நிலைப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள்.
அவளின் இதயம் இப்போதுதான் சீராக துடிக்க ஆரம்பித்திருந்தது.
அத்தனை விஷயங்களும் படிப்படியாக நினைவிற்கு வந்து விட்டன.
கூட்டத்தில் தொலைந்து, பின்னர் வெகு நேரமாக இதே இடத்தில் நின்று இருக்கிறோம் என்ற விஷயம் புரிந்ததும் பயந்து விட்டாள்.
இவ்வளவு நேரமும் கூட பயப்படவில்லை. இப்போதுதான் பயம் தோன்றியது.
"அண்ணா எங்கே போன என்னை விட்டுட்டு.?" என்று கேட்டாள்.
தங்கையின் தலையை தடவி கொடுத்தான் மித்ரன். அவளின் தலையின் உச்சியில் முத்தமிட்டான். அவள் தன் அருகில்தான் இருக்கிறாள் என்று புரிந்து மனம் அமைதிப்படும் வரை அவளை விலகவில்லை அவன்.
மித்ரனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மதுரன் அவர்கள் இருவரையும் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
தன்னை போலதான் மதுரனும் பயந்திருக்கிறான் என்று புரிந்து கொண்ட மித்ரன் சில நிமிடங்களுக்கு பிறகு தங்கையை விட்டு இரண்டடி விலகி நின்றான்.
மித்ரா மதுரனை ஏறிட்டு பார்த்தாள்.
கண்கலங்க நின்று இருந்தவன் அவள் தன்னை பார்க்க ஆரம்பித்ததுமே சட்டென்று அவளை தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டான்.
இவர்கள் மூவரும் வீடு திரும்பிய போது அந்த வீட்டின் வாசற்படியிலேயே அமர்ந்து காத்திருந்தாள் நீலவேணி.
இவர்கள் வந்ததும் எழுந்தோடி அருகில் வந்தாள்
"ஹப்பா! கிடைச்சிடிங்க.." என்றாள் சந்தோஷத்தோடு.
மித்ரா எதுவும் சொல்லவில்லை. அமைதியாக உள்ளே சென்று விட்டாள். நீலவேணி தன்னை தாண்டி சென்றவளின் முதுகை குழப்பமாக பார்த்தாள்.
"பயந்துட்டா.. அதனாலதான்.." என்று நீலவேணிக்கு சமாதானம் சொன்ன மித்ரன் "தேங்க்ஸ்.. நீ சரியான நேரத்துல ஞாபகப்படுத்தின.. இல்லன்னா நாங்க இன்னமும் அவளை தேடிக்கிட்டுதான் இருந்திருப்போம்.." என்று சொன்னான்.