Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] இளவரசி 29 | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!

sevanthi durai

Administrator
Joined
Mar 19, 2025
Messages
754

29​

மறுநாள் காலையில் கண்விழிக்கும் போதே கண்கள் எரிந்தது நீலவேணிக்கு.​

இரவெல்லாம் அழுது தீர்த்த காரணத்தால் இதயமும் வலித்தது. சோர்வோடு தலையை பிடித்தபடி எழுந்தமர்ந்தாள்.​

இரவில் அவள் கொண்டு வந்த பால் சொம்புதான் அவளின் பார்வைக்கு இப்போது முதலில் தட்டுப்பட்டது. மேஜையின் மீதிருந்த பால் சொம்பை எடுத்து சுவரில் அடித்து விட சொல்லி கட்டளையிட்டது அவளின் மூளை.​

எரிந்து கொண்டிருக்கும் இதயத்திற்கு என்ன செய்தால் கோபம் தீரும் என்று தெரியவில்லை. ஆனால் முட்டாள்தனமாக எதையும் செய்யக்கூடாது என்று மட்டும் புரிந்தது.​

அறை பளிச்சென்று இருந்தது.‌​

எந்த இடத்திலும் அவள் தூக்கி வீசிய பூக்களின் இதழ்கள் கூட தென்படவில்லை.​

அத்தனையையும் அவனே சுத்தம் செய்து இருந்தான். அதை புரிந்து கொண்டவளுக்கு வாழ்க்கையே சலிப்பாக இருந்தது.​

அருகில் பார்த்தாள். அவனை காணவில்லை.​

தலையை பிடித்தபடி அவள் அமர்ந்திருந்த நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. அவன்தான் உள்ளே வந்தான்.​

"காபி.." என்று அவளிடம் நீட்டினான்.​

வாங்காமல் அவனையே பார்த்தாள்.​

"நான் சமைச்சா உனக்கு பிடிக்கும்ன்னு சொல்வியே. அதனாலதான் காபி போட்டு கொண்டு வந்தேன்.." என்றான்.​

கசப்போடு நகைத்தபடி எழுந்து நின்றவள் காபி கோப்பையை வாங்கவில்லை.​

"எனக்கு பிடிக்கும்ன்னு கொண்டு வந்தியா.? இல்ல கடுப்புல நான் உன் தங்கச்சியை எதுவும் சொல்லிட கூடாதுன்னு கொண்டு வந்தியா.? என்று கேட்டாள்.​

அவனின் முகம் கறுத்து விட்டது.​

"தயவுசெஞ்சி என் தங்கச்சியை குறுக்க இழுக்காத. நான்தான் நீ சொல்ற மாதிரி இருக்கேன்னு சொல்லிட்டேனே.." என்றவனின் கன்னத்தில் சப்பென்று ஒரு அறையை விட்டாள்.​

அமைதியாக நின்றான். மீண்டும் அவளுக்கு கண்ணீர்தான் துளிர்த்தது.​

அவள் அறைந்ததும் அவளை திருப்பி அறைந்திருந்தால் அவளின் மனம் கொஞ்சம் சீர்பட்டு இருக்குமோ? அல்லது அறையும் முன்பே அந்த கையைப் பிடித்து 'அடங்கி இரு..' என்று சொல்லி இருந்தால் அவளுக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்திருக்குமோ? அவனாக ஆளுமையை காட்டி இருந்தால் அவளின் காதல் அவளுக்கு ஏமாற்றத்தை தராமல் இருந்திருக்குமோ?​

அவனின் கோழைத்தனம் அவளை உடைத்தது. அவனை முந்தானையில் முடிய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அது என்னவோ உண்மைதான்.​

ஆனால் எந்த ஒரு முயற்சியுமே இல்லாமல் தானாக வந்து காலில் விழும் ஒருவனை முந்தானையில் முடிந்தால்தான் என்ன பயன்? முடியாவிட்டால்தான் என்ன பயன் என்ற எண்ணம்தான் அவளுக்குள் இருந்தது.​

அவனை பார்க்க கூட பிடிக்காமல் குளியல் அறைக்குள் புகுந்தாள். அழுதபடியே குளித்தாள். தன் தாய் தந்தையின் மீது கோபம் வந்தது. கடைசிவரை மதுரன்தான் ஜெயித்திருந்தான்.​

மகனின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக தன்னை முழுமையாக சீரழித்து விட்டார்கள் இந்த பெற்றோர் என்று வேதனைப்பட்டபடியே குளித்து முடித்தாள்.​

தன்னை நினைக்கையில் ஜடம் போல தோன்றியது. வாழ்க்கையும் கூட வேறு ஏதோ ஒரு மாதிரிதான் தோன்றியது.​

டவலை சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள். அவனை காணவில்லை. இப்போதுதான் மூச்சை கூட சற்று சுதந்திரமாக விட முடிந்தது.​

கதவை தாழிட்டு விட்டு வந்து எளிமையான சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்தாள்.​

கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. கல்லூரி பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள்.​

அவள் கதவை திறந்த நேரத்தில் வெளியே நின்றிருந்த அத்தை அவசரமாக உள்ளே வந்தாள்.​

"என்னடி நைட் எல்லாம் நல்லபடியா நடந்ததா? உன் மனசு கோணாதபடி நடந்துக்கிட்டானா அவன்? அவனோட மனசு கோணாதபடிதானே நடந்துகிட்ட நீயும்.?" என்று அக்கறையாக விசாரித்தாள்.​

அத்தையின் முகத்தில் இருக்கும் இந்த அக்கறை கூட அவனிடம் இல்லையே என நினைத்ததும் மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.​

வந்த அழுகையை கழுத்தோடு நிறுத்தி விழுங்கி விட்டு அத்தையை பார்த்தவள் "யார் மனசும் கோணல.." என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தாள்.​

"எங்கடி கிளம்பிட்ட.?" அத்தை சந்தேகமாக கேட்டாள்.​

"காலேஜ் போறேன்.." என்று சொன்னவளின் பின்னால் ஓடியவள் "என்னடி அதுக்குள்ள காலேஜ் போறேன்னு சொல்ற.? இன்னும் உன் அண்ணனும் அண்ணியும் அவங்களோட பெட்ரூம் கதவை கூட திறக்கல.‌ நீ என்னடான்னா காலேஜ் பேக்கை மாட்டிகிட்டு கிளம்பிட்ட.. ஒரு வாரத்துக்காவது வீட்டில் இருடி.." என்றாள்.​

படிகளில் இறங்கியவள் "ஒரு வாரம் வீட்டுல இருந்து என்ன செய்யப் போறேன்? படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கு.. நான் காலேஜ் போறேன்.." என்று சொன்னாள்.​

உணவு மேஜையில் வந்து அமர்ந்தாள்.​

வீடு காலியாக கிடப்பது போல் தோன்றியது. அம்மாவும் அப்பாவும் திருமண வேலைகளை செய்ததால் களைப்படைந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் போல என நினைத்தவள் "சாப்பாடு கொண்டு வாங்க.." என்றாள் சமையல் அறையை பார்த்து.​

சமையல்கார பெண்மணி அவசரமாக ஓடி வந்தாள்.​

இவளுக்கு பரிமாறினாள்.​

உணவை ருசித்தவள் சுவை மாறுபட்டு இருப்பதை கண்டாள். ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உணவை உண்ண ஆரம்பித்தாள்.​

தொண்டைக்குள் இறங்க மறுத்தது உணவு. வாழ்க்கையில் எத்தனையோ தோல்விகளை கண்டுள்ளாள். ஆனால் இப்படி வாழ்க்கையே தோற்றுப் போனதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.​

உணவை பாதியிலேயே தள்ளி வைத்துவிட்டு கையை சுத்தம் செய்து கொண்டு எழுந்தவள் கல்லூரி பேக்கை மீண்டும் எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினாள்.​

வாசலில் நின்றிருந்தான் மித்ரன்.​

"நான் உன்னை காலேஜ்ல விடுறேன்.." என்றான்.​

கசப்போடு நகைத்தவள் "எனக்கு உன்னோட லிஃப்டும் வேணாம். உன்னோட பரிதாபமும் வேணாம். நான் என்ன சொன்னாலும் செய்வேன்னு சொன்ன இல்ல? உன்னால முடிஞ்சா உன் முகத்தை நான் பார்க்காத அளவுக்கு தூரமா விலகி இருந்திடு. அதுதான் நீ எனக்கு செய்ற ஒரே உதவியா இருக்கும்.." என்றவள் தனது ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள்.​

அவனை திரும்பி கூட பார்க்காமல் கல்லூரிக்கு புறப்பட்டு விட்டாள்.​

சென்றவளை பார்த்தபடியே நின்றிருந்தான் மித்ரன். அவனின் தோளில் பதிந்தது ஒரு கரம். திரும்பினான்.​

வெண்முகிலி நின்று கொண்டிருந்தாள்.​

"என்ன ஆச்சிப்பா.?" என்றுக் கேட்டாள்.​

தன் மருமகளின் மனதுக்குள் ஏதோ ஒரு வெறுமை இருக்கிறது என்பதை இந்த அத்தையாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது.​

'எந்த பெண்ணும் திருமணம் ஆன மறுநாளே கல்லூரிக்கு கிளம்ப மாட்டாள். அதுவும் படிப்பை வெறுக்கும் ஒருத்தி நிச்சயம் செல்ல மாட்டாள். ஆனால் இவள் செல்கிறாள் என்றால் அதன் பின்னால் வலுவான காரணம் இருக்கும்..' என்று நம்பினாள்.​

மித்ரன் உதட்டை கடித்தபடி யோசனையில் ஆழ்ந்தான்‌.​

அவனை தனது அறைக்கு அழைத்துச் சென்றாள் வெண்முகிலி.​

வெண்முகிலியின் அறையில் ஒற்றைக் கட்டிலும் ஒற்றை பீரோவும் ஒரே ஒரு மேஜையும் மட்டுமே இருந்தன. அவள் கணவரின் புகைப்படம் சுவரில் பெரிய படமாக மாட்டப்பட்டிருந்தது. புகைப்படத்தின் மீது மாலைகள் எதுவும் இல்லை.​

வெண்முகிலியின் நெற்றியிலும் கூட பொட்டு இருந்தது.​

இந்த காலத்தில் இதுவெல்லாம் ஒரு விஷயமா என நினைத்துக் கொண்ட மித்ரன் அந்த புகைப்படத்தை அனுதாபத்தோடு பார்த்தான்.​

சிறுவயதிலேயே இறந்து விட்டவர். இருவரும் நான்கு ஆண்டுகள் கூட சேர்ந்து வாழ்ந்திருக்கவில்லை. அதற்குள் விதவையாகிவிட்டாள் வெண்முகிலி.​

அவள் விதவையான நாளிலிருந்து அவளுக்கு பக்க துணையாக இருப்பது கபிலன்தான்.​

கபிலன் என்ற ஒருவர் இல்லையென்றால் இன்று வெண்முகிலி இல்லை. சமூகத்தில் ஒரு பெண் தனியாக வாழ்வது என்பது இன்றுவரையிலும் ஆபத்தான ஒரு விஷயம்தான். வெட்டுக்கத்திகளும் கோடாரிகளும் எந்த திசையில் இருந்து எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. உறவு என்பது விஷயம் அல்ல. பாதுகாப்புக்கு யாராவது ஒரு ஆண் இருந்தே ஆக வேண்டும். கணவனை இழந்தவள் தனக்குத்தானே நிலைபெற்று தன்னைத்தானே பாதுகாப்பு கேடயமாக மாற்றிக் கொள்வதற்குள் எத்தனையோ ஆயிரம் மோசமான பேர்வழிகளை பார்த்தாக வேண்டி இருக்கிறது. ஆனால் வெண்முகிலி எந்த ஒரு சிறு பிரச்சனைகளுக்குள்ளும் சிக்காமல் இன்று சிறந்த தாயாக இருப்பதற்கும் சமூகத்தில் ஒரு பிசினஸ் வுமனாக பெயர் வாங்குவதற்கும் முழு காரணம் கபிலன்தான்.​

"எனக்கு உங்க மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு தம்பி. என்னோட அண்ணனும் அண்ணியும் உங்களை மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்தபோது மத்தவங்களை விடவும் அதிகமா சந்தோஷப்பட்டது நான்தான். நீங்க என் மருமகளோட மனசு உடையும் அளவுக்கு எதுவும் செய்ய மாட்டிங்கன்னு நான் மனசார நம்புறேன். ஆனா ஒரு பொண்ணு கல்யாணமான அடுத்த நாளே காலேஜ் கிளம்புறான்னா அதுக்கு நிச்சயம் அவளோட புருஷன்தான் காரணமா இருக்க முடியும். நாங்க உங்களுக்கு ஏதாவது குறை வச்சிட்டோம்மா.? அப்படி இருந்தா சொல்லுங்க. நாங்க அதை சரி பண்ணிடுறோம்.." என்று சொன்னாள்.​

வார்த்தைகள் வர மறுத்தது அவனுக்கு.​

"ஒருவேளை உங்க மனசுக்குள்ள ஏதாவது மனஸ்தாபம் இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க. என்னை உங்களோட சொந்த அம்மாவா நெனச்சி சொல்லுங்க.." என்றாள்.​

அவளின் வார்த்தையில் இவன் விழுந்து விட்டான்.​

யார் இந்த மாதிரியான ஒரு வார்த்தையை சொல்வார்கள்? அதிலும் சிறுவயதிலேயே தாயை இழந்து விட்ட அவனுக்கு இந்த வார்த்தை கடவுளின் வார்த்தையைப் போல.​

அதனாலேயே தனக்கும் நீலவேணிக்கும் இடையில் இருந்த பிரச்சனையை மறைக்காமல் சொல்லிவிட்டான்.​

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து விட்டாள் வெண்முகிலி.​

"என்னப்பா இது? உங்க நாலு பேர்லயே நீதான் மெச்சூரானவன்னு நான் நம்பிக்கிட்டு இருக்கேன். ஆனா இவ்வளவு இம்மெச்சூரா இருக்கியே நீ!?" என்று ஆச்சரியப்பட்டாள்.​

"அதுக்காக நான் அவகிட்ட பொய் சொல்ல முடியுமா.?" என அவன் கேட்க, அவளின் அதிர்ச்சி கூடியது.​

"உன் மனசாட்சியை கேட்டு சொல்லு. நீ நூறு சதவீதம் உன் தங்கச்சிக்காக மட்டும்தான் இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டியா.? இமைக்கும் நேரத்துல கூட இவ மேல உனக்கு ஆசைன்னு எதுவும் வரலையா.?" என்று அவனை பார்த்து கேட்டாள்.​

பதில் சொல்ல முடியாமல் தயங்கினான்.​

"பரவால்ல சொல்லு. எனக்கு என் பொண்ணும் நீலவேணியும் ஒன்னேதான். அவளுக்கு இப்படி ஒரு அநியாயம் நடப்பதை என்னால ஏத்துக்க முடியாது.." என்று சொன்னாள்.​

"இதுல எங்க அநியாயம் இருக்கு? நான் உண்மையா இருக்கேன். அது தப்பா.?" என்று கேட்டான அவன்.​

அவனின் முகத்தைப் பார்த்தவள் "இந்த வார்த்தைக்காக நீ ஒரு நாள் வருத்தப்படுவ. உண்மையா இருப்பது வேற. தன்னோட மனசுகிட்டேயே பொய் சொல்லிக்கிறது வேற. நீ முழுக்க முழுக்க உன் தங்கச்சிக்காக மட்டும்தான் எங்க பொண்ணை கல்யாணம் செஞ்சி இருக்கன்னா அது ரொம்ப பெரிய பாவம்.." என்றாள்.​

இவனுக்கு கோபமே வந்துவிட்டது.​

"எப்படிங்க மனசாட்சி இல்லாம பேசுறிங்க.? மதுரனுக்கும் மித்ராவுக்கும் கல்யாணம் ஆகணும்ங்கற ஒரே ஒரு காரணத்துக்காகதானே நீங்களும் நீலவேணியை எனக்கு கல்யாணம் செஞ்சி வச்சிங்க. இங்கே மெயின் அவங்க இரண்டு பேரும்தானே.?"​

பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள் வெண்முகிலி.​

இவன் சொல்வதைக் கேட்க கேட்க இதய கோளாறு வராமல் இருந்தால் அதுவே பெரிய விஷயம்.​

"மதுரனுக்காக எங்க பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கல நாங்க.." என்றவளின் குரல் இப்போது கோபமாக மாறியிருந்தது.​

"எங்க பொண்ணுக்கு நீ ரொம்ப பொருத்தமா இருப்பன்னு நம்பி கல்யாணத்தை பண்ணி வச்சோம். அக்னிமித்ரன்ங்கற உன்னோட கேரக்டருக்கு இந்த வீட்டுல பெரிய கிரேஸ் இருந்தது. எங்க பொண்ணுக்கு உன்னை விட பொருத்தமானவன் இந்த உலகத்துல வேறு எங்கேயுமே இருக்க மாட்டான்னு நம்பினோம் நாங்க. எங்களோட நம்பிக்கையை ரொம்ப சூப்பரா காப்பாத்தியிருக்க நீ. என்ன செய்றது எல்லாம் என் அண்ணனை சொல்லணும். உன்னை கட்டிக்க முடியாதுன்னு சொன்ன என் மருமகக்கிட்ட உன்னை பத்தி புகழ்ந்து பேசி அவ மனசை கரைச்சேன் நான். அவ ஒரு நாய்க்குட்டி வேணும்ன்னு கேட்க கிடையாது. அவளுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டு போயிட்டே இருப்பா. இப்படி நம்ப வச்சி கழுத்தறுக்க மாட்டா.." என்றவள் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி கொண்டு நிமிர்ந்தாள்.​

அவள் சொன்னது கேட்டு இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'தனக்காக அவளை திருமணம் செய்து வைத்தார்களா? மதுரனுக்காக இல்லையா?' என நினைத்து அதிர்ந்தான்.​


தொடரும்.
 
  • Love
Reactions: Anu
Back
Top