"என்னை நீ நம்ப மாட்டியா வேணி.? ஐ லவ் யூ.." இவன் சொன்னது அவளின் காதில் ஏறவில்லை. ஏனெனில் அதற்கு முன்பே உறங்கி விட்டாள் அவள்.
சந்தேகத்தோடு அவளின் போர்வையை விலக்கினான்
உறங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தை பார்த்தான்.
சோர்ந்து போய் இருந்தது.
"ஏன் இப்படி உன்னை நீயே வதைக்கிற? உனக்கு என்னோட கஷ்டம் தெரியலையா?" என்று புலம்பியவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.
"சாரி வேணி. தப்பு என் மேலதான்.. ஆனா என்னோட லவ்வையும் கொஞ்சமாவது நம்பு.." என்று சொல்லிவிட்டு அவளருகில் உறங்கினான்.
நடு இரவில் குளிரால் நடுங்கினாள். சுயநினைவு இல்லாமல் இருந்தவளுக்கு மாத்திரையை தந்தவன் அவளை அணைத்தபடி உறங்க ஆரம்பித்தான்.
உறக்கத்தில் கூட இவனை திட்டியபடி விம்மியழுதாள் அவள். இவனுக்கு பாவமாக இருந்தது. தன் மீதான கொலை வெறி கூடியது.
"வேணி.. சாரிடாம்மா. இனிமே இப்படி எந்த தப்பும் செய்ய மாட்டேன்.." என்று அவளின் காதுகளில் மெல்லமாக கிசுகிசுத்தான்.
இவனின் கழுத்தில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு இவன் சொன்னது எதுவும் மூளையிலோ மனதிலோ பதியவில்லை.
மறுநாள் காலையில் காய்ச்சல் மிகுந்து விட்டது இவளுக்கு. அவனுக்கோ முக்கியமான வழக்கு ஒன்று இருந்தது.
தன்னால் நீதிமன்றத்திற்கு வர முடியாது என்று லாரன்ஸுக்கு கைபேசியில் அழைத்துச் சொல்லிவிட்டான்.
அரை மயக்கத்தோடு எழுந்து அமர்ந்தவள் அவன் சொன்னதை கேட்டு விட்டு "எனக்கு காய்ச்சல். இன்னைக்காவது நான் நிம்மதியா இருக்கணும்ன்னு நினைக்கிறேன். தயவுசெஞ்சி நீ வேலைக்கு போயிடு. உன்னை பார்த்தா என்னோட காய்ச்சல் குறையாது.." என்று கெஞ்சினாள்.
அவள் சொன்னதில் மனம் உடைந்தவன் அவளிடம் மறுத்து சொல்லாமல் வேலைக்கு கிளம்பி விட்டான்.
வெண்முகிலி மருமகளுக்கு துணையாக இருந்தாள்.
"என்ன ஆச்சி.? எதுக்காக நீயும் அவனும் இப்படி முறுக்கிக்கிட்டே இருக்கிங்க.?" என்ன கேட்டாள்.
"எதுவும் இல்ல அத்தை.. புருஷன் பொண்டாட்டின்னா சண்டை வரதான் செய்யும். அந்த மாதிரிதான் இதுவும்.." என்று சொல்லி தட்டிக் கழித்து விட்டாள்.
தோழிகளிடம் சொல்லுவதற்கு தயக்கமில்லை. ஏனெனில் அவர்கள் அறிவுரை சொல்வார்களே தவிர தனக்கான முடிவுகளை எடுக்க மாட்டார்கள்.
ஆனால் வீட்டில் அப்படி இல்லை. இவர்களிடமிருந்து அறிவுரை வருகிறதோ இல்லையோ தான் எடுக்க வேண்டிய முடிவுகளை அவர்களாகவே எடுத்துவிட்டு 'உனது
நல்லதற்காகதான் இதை செய்தோம்' என்றும் சொல்லி விடுவார்கள்.
அதற்காகவே வீட்டில் இந்த விஷயங்களை பேசாமல் தவிர்த்தாள்.
***
மாலையில் வீடு வந்த மித்ரன் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் நெற்றியில் கை வைத்தான். சூடு கொஞ்சம் குறைந்திருந்தது. இப்போதுதான் அவனுக்கே நிம்மதியாக இருந்தது.
இரவில் அவளுக்காக கஞ்சியை கொண்டு வந்தான். அவளுக்கு ஊட்டி விட முயன்றான்.
"எனக்கு நீ ஊட்ட வேணாம்.. நானே சாப்பிட்டுகிறேன்.." என்று சொல்லி கிண்ணத்தை வாங்கியவள் தனக்குத்தானே சாப்பிட்டுக் கொள்ள முயல, பாத்திரத்தை பிடிக்கவும் சக்தியின்றி அதை மடிமீது விட்டு விட்டாள். அரை சூடாக இருந்த கஞ்சி அவளின் உடைகளை நனைத்தது.
"ஏன் இப்படி பண்ற? என் சொல் பேச்சு கேட்க மாட்டியா?" என்று வருத்தத்தோடு சொல்லியபடியே அவளின் உடைகளின் மீதிருந்த கஞ்சியை துடைத்தான் அவன்.
"ரொம்ப சூடா இருக்கா? வாஷ் பண்ணிக்கிறியா? சூடு கொஞ்சம் குறைஞ்சிடும்.." அவன் சொல்ல, வேண்டாம் என்று தலையசைத்தவள் "என்னை தூங்க விடு. அதுவே போதும்.." என்று சொல்லிவிட்டு தலையணையில் சாய்ந்தாள்.
மறுநாள் காய்ச்சல் ஓரளவிற்கு தீர்ந்ததுமே கல்லூரிக்கு ஓடிவிட்டாள். மித்ரனுக்கு பைத்தியமே பிடிக்கும் போல இருந்தது.
"நீ கண்டிப்பா இந்த கடையை நடத்தியே ஆகணுமா.?" என்று கேட்டான்.
"எனக்கு பிடிச்சிருக்கு.. தடை சொல்லாம இருங்க.." என்று அவனின் தாடையைப் பிடித்து கொஞ்சிவிட்டு கடையை திறந்தாள்.
கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் ஆகிவிட்டது இந்த கடையை திறந்து. தூசு படிந்து இருந்தது அத்தனையையும். அடித்து சுத்தம் செய்தாள்.
வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்ததும் அவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.
மதுரன் அலுவலகத்திற்குச் சென்ற பிறகு இவளுக்கு அழைத்தான். ஆனால் அழைப்பை துண்டித்துக் கொள்ளவே இல்லை.
"போன் அப்படியே இருக்கட்டும். நீ கஸ்டமரை பாரு.." என்று சொன்னவன் அவளின் காதுகளிலிருந்து கைபேசி இறக்குவதற்கு விடவே இல்லை.
"போன் சூடாகிடுச்சி. என் காது தீய போகுது.." என்று அவள் சொன்ன போதும் "நான் நாளைக்கு ப்ளூடூத் ஹெட்செட் தரேன். அதை யூஸ் பண்ணிக்க.." என்றுதான் சொன்னான்.
"என்ன செய்ற.? என்ன பண்ற.?" இந்த ஒரே அர்த்த கேள்விதான் மதியம் வரையிலும் ஓராயிரம் முறை கேட்கப்பட்டது.
கடையில் விற்பனையாகிக் கொண்டிருந்த ஒவ்வொரு பொருளையும் அவனுக்கு தகவலாக சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கே சலித்து விட்டது. ஆனால் அவனுக்கு சலிக்கவில்லை.
மதிய உணவு இடைவேளை நேரத்தில் அவள் டிபன் பாக்ஸை கையில் எடுத்த நேரத்தில் அவளின் கடை வாசலில் வந்து நின்று ஹாரனை அடித்தான்.
"சேர்ந்து சாப்பிடலாம்.." என்று சொல்லியபடி தனது லஞ்ச் பேக்கோடு அந்த கடைக்குள் புகுந்தான்.
இருவரும் தரையில் அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள்.
"மது நான் ஒன்னு சொல்லுவேன். நீங்க அதை எப்படி எடுத்துப்பிங்கன்னு தெரியல.." அவள் பீடிகை போட "என்ன விஷயம்ன்னு சொல்லு.." என்றான் அவளின் இதழோரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஒற்றை சோற்றுப் பருக்கையை இரு விரல்களால் எடுத்து தன் வாயில் போட்டபடியே.
"வேணிக்கும் என் அண்ணனுக்கும் நடுவுல எதுவோ செட் ஆகலன்னு தோணுது.. நாம வெளியே போகும்போது அவங்களையும் கூட்டிப் போகலாமா.? எங்கேயும் போகாம இருக்காங்க. பார்க்கப் பாவமா இருக்கு.. நம்மை சாக்கு வச்சாவது வெளியே நாலு இடம் சுத்தினா அவங்களுக்குள்ளவும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும் இல்லையா.?" என கேட்டாள்.
"அவங்களுக்கு தேவைன்னா அவங்க போய்க்க போறாங்க.." என்றவனை முறைத்தவள் "நமக்கு கல்யாணம் ஆகணும்ன்னு அவங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க. நன்றி கடன் செலுத்தணும்ன்னு சொல்லல. ஆனா அவ உங்களுக்கும் தங்கச்சிதானே? அவளோட வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு உங்களுக்கு மட்டும் அக்கறை இல்லையா.?" என கேட்டாள்.
யோசித்தான் மதுரன்.
'அந்த பிசாசுக்காக நாம் உதவி செய்வதா .?' என்ற கேள்விதான் முதலில் எழுந்தது.
"எனக்கு மனசு வரமாட்டேங்குது.."
அவனின் தலையில் கொட்டு வைத்தாள்.
"நான் சொல்றதை கேளுங்க ப்ளீஸ்.. அவங்க வாழ்க்கை நல்லா இருந்தாதான் நமக்கும் வாழ்க்கை நல்லா இருக்கும். ப்ளீஸ் எனக்காக கேளுங்க.." என்று கெஞ்சி கூத்தாடி அவனை சம்மதிக்க வைத்தாள்.
புது பொண்டாட்டி மீதிருந்த மோகமா? இல்லை இந்த ஒரு விஷயத்தை செய்து விட்டால் அவள் சொன்ன நன்றிக்கடன் தீர்ந்து விடும் என்று சம்மதம் சொன்னானா? அது அவனுக்கே தெரியவில்லை.
ஆனால் அன்று மாலையில் வீட்டிற்கு வந்த இருவரும் தங்கள் கையில் இருந்த நான்கு டிக்கெட்டுகளையும் மித்ரனிடம் காட்டினார்கள்.
"நாம நாலு பேரும் சினிமா போகலாம்.." என்று சொன்னாள் மித்ரா.
"அவளுக்கு படிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு.." மித்ரன் தட்டிக் கழிக்க பார்த்தான்.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல. மரியாதையா வாங்க போகலாம். இன்னைக்காவது அவ சீக்கிரம் வந்தாளா இல்ல பிரண்ட்ஸோட சேர்ந்து வெளிய சுத்த போயிட்டாளா.?" சந்தேகத்தோடு கேட்டாள் மித்ரா.
"வந்துட்டா.." என்று சொன்னவன் தனது சோகத்தை தங்கையிடம் காட்டிக் கொள்ளாமல் அறைக்குள் புகுந்தான்.
குறுங்கி படுத்திருந்தாள் நீலவேணி.
அவளின் அருகில் சென்று அமர்ந்தவன் "மித்ரா சினிமாவுக்கு டிக்கெட் வாங்கி வந்திருக்கா. நாம படத்துக்கு போகலாம்.." என்றான்.
போகலாமா என்று கூட கேட்காமல் போகலாம் என்று அவனே முடிவெடுத்து சொன்னது அவளுக்கு இயல்பான வருத்தத்தை கொடுத்தது.
"எனக்கு தலை ரொம்ப வலிக்குது. உடம்பும் வலிக்குது.. என்னால படத்துக்கு வர முடியாது.. என்னை விட்டுடு.." என்று சொன்னவள் அனத்தாமல் இருக்க பெரும்பாடு பட்டாள்.
உடல் அசதியின் காரணமாகதான் கல்லூரியிலிருந்து நேராக வீட்டிற்கு வந்திருந்தாள். அவளின் உடல்நிலை இவனுக்கும் புரிந்தது.
"ஹாஸ்பிடல் போலாமா.?"
"ஒன்னும் தேவையில்ல.. நீ என்கிட்ட பேசாம இருந்தாலே போதும்.."
"ஒன்னு ஆஸ்பிட்டல் போகலாம். இல்லன்னா தியேட்டர் போகலாம்.. ரெண்டுல எதுன்னு நீயே முடிவு பண்ணு.." என்று சொன்னவன் சீப்பை எடுத்து தலை வார ஆரம்பித்தான்.
பர்ஸை கால் சட்டை பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.
போர்வையை போர்த்தியபடியே எழுந்து அமர்ந்தவள் "தியேட்டர் போகலாம்.." என்று சொன்னாள் பற்களை கடித்தபடி
அதிர்ந்தான் அவன்
அவளின் பிடிவாதம் எந்த அளவுக்கானது என்று புரிந்து தனக்குள் நகைத்தான்.
மதுரன் காரை ஸ்டார்ட் செய்தான்.
"இவனோட கார்ல நான் ஏறணுமா.?" எரிச்சலோடு முனகியபடியே பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள் நீலவேணி.
அவளின் அருகில் அமர்ந்த மித்ரன் தன்னை திரும்பிப் பார்த்து சிரித்த தங்கையிடம் புன்னகைத்தான்.
கார் சாலையில் இறங்கியது.
சினிமா தியேட்டரின் உள்ளே நுழைந்து கார் பார்க்கிங்கில் சென்று நின்றது. மனைவியின் கைப்பிடித்து கொண்டு கீழே இறங்கினான் மித்ரன்.
வேணி வெறுப்போடு தனது கையை தந்திருந்தாள்.
தியேட்டரில் பின்னால் நின்றிருந்தார்கள் நால்வரும்.
மித்ராவும் மதுரனும் முன்னால் நடக்க, "நாங்க இரண்டு பேரும் பக்கத்துல இருக்கும் ஹாஸ்பிட்டல் போயிட்டு வரோம்.. நீங்க அதுவரைக்கும் படம் பாருங்க.." என்று சொன்னான் மித்ரன்.
அண்ணனை வித்தியாசமாக பார்த்த மித்ரா நீலவேணியின் முகத்தில் இருந்த சோர்வை கண்டுவிட்டு தன் கையில் இருந்த டிக்கெட்டுகள் இரண்டையும் அவனின் கையில் திணித்துவிட்டு தன் கணவனோடு தியேட்டருக்கு சென்றாள்.
"நான் ஹாஸ்பிட்டல் வரல.." என்ற நீலவேணியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.
"என்னை எதுக்காக இப்படி சித்திரவதை பண்ற.?" என்று கேட்டவளின் புறம் திரும்பி தன் உதட்டின் மீது விரலை வைத்து "பேசாத.." என்றான்.
"ஹாஸ்பிட்டல் போறோம். உனக்கு ஊசி போடுறோம்.." என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றான்.