Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] இளவரசி 58 | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!

sevanthi durai

Administrator
Joined
Mar 19, 2025
Messages
754
58

தங்கை சொன்னது கேட்டு கோபம் வந்தது மித்ரனுக்கு.

"காரணம் கிடைச்சாலும் அதை சரியா பயன்படுத்திக்க மனசு வரமாட்டேங்குது உனக்கு.." என்று திட்டிய மித்ரன் "இந்த கர்ப்ப காலத்துல நீ எடுத்துக்கற உணவாவது உன்னோட ஞாபக மறதியை சரி பண்ணணும்ன்னு ஆசைப்படுறேன் நான்.." என்றான்.

தங்கையின் மனக்கவலையில் பங்கெடுத்து வெகு நேரம் அவளோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டு அறைக்கு திரும்பினான்.

மணி பன்னிரெண்டை நெருங்கி விட்டது.

கதவைத் திறந்தான். அமர்ந்த நிலையிலேயே தலையணையில் முதுகு சாய்ந்து உறங்கி விட்டிருந்தாள் நீலவேணி.

அவளின் அருகில் சென்றவன் அவளை படுக்கையில் சாய்த்தான். போர்வையை போர்த்தி விட்டவன் அவளை அணைத்தபடி உறங்கிப் போனான்.

மறுநாள் வேலைக்குச் செல்லவில்லை மித்ரன். மாறாக மச்சானை தேடிக்கொண்டு ஹோட்டலுக்கு சென்றான்.

இரண்டு வாரங்களாக ஓட்டல் அறைக்குள் மட்டுமே இருந்தான் அவன். வெளியே செல்லவே இல்லை. கபிலனும் இன்பாவும் நான்கைந்து முறை இவனிடம் சமாதானம் பேசுவதற்கு வந்தார்கள். ஆனால் இவன் கதவை கூட திறக்க மறுத்து விட்டான்.

மித்ரன் மட்டும்தான் ஒரு சில முறை பேசினான். ஆனால் அப்போதும் கூட அவனாக இறங்கி வந்து தந்தையிடமோ மனைவியிடமோ மன்னிப்பு கேட்க தயாராக இல்லை என்று கறாராக சொல்லிவிட்டான்.

மித்ரன் கதவை தட்டியதும் எழுந்து வந்து கதவை திறந்தவன் "உங்க தங்கச்சி இன்னமும் மனசு மாறலையா.?" என்று எடுத்ததும் கேட்டான்.

அவன் உண்மையிலேயே ஒரு சுயநலவாதி. ஆனால் அவனின் சுயநலத்தில் மித்ராவும் சேர்ந்தே இருந்தாள். அதை இவனாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

"அதைப் பத்தி பேசதான் வந்தேன்.." என்று சொன்ன மித்ரன் அந்த அறையில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தான்.

"உட்காருங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.."

மித்ரனுக்கு முன்னால் வந்து அமர்ந்தான் மதுரன்.

"என் அப்பா எனக்கு சொத்து இல்லன்னு சொன்னபோது கூட எனக்கு அவ்வளவா பீல் ஆகல. நான் சுயமா சம்பாதிச்சிப்பேன்னு நம்பிக்கை வந்தது. ஆனா இவ பண்ண வேலையால என்னோட இதயமே உடைந்து போச்சி. ரொம்ப பீல் பண்றேன். வர கோபத்துக்கு தாலியால என் கழுத்தை இறுக்கிகிட்டு செத்து போலாமான்னு தோணுது.." என்று புலம்பினான்.

மித்ரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. "ஏங்க இப்படி எல்லாம் பேசுறிங்க.? கொஞ்சம் தெளிவா யோசிக்கலாமே.."

"தெளிவா என்னங்க யோசிக்கட்டும்.? நான் செஞ்சது தப்புதான். ஆனா நான் கட்டிய தாலியை கழட்டி வீசிட்டு போனவ கால்ல வந்து நான் விழ முடியுமா? கால்ல விழ கூட நான் தயார். ஆனா உங்க வீட்ல வந்து விழ மாட்டேன். அவளை இங்கே வர சொல்லுங்க. நான் கால்ல விழுறேன்.." என்றான்.

'ஐயோ சாமி' என்று இருந்தது இவனுக்கு.

'யார் இவன்? என்ன மாதிரியான ஒரு ஈகோவுக்கு சொந்தக்காரன்?' என்று நினைத்து தனக்குள் சிரித்தான் மித்ரன்.

"சரி அப்படிதான் மன்னிப்பு கேட்டுட்டா போச்சி.." என்று சொன்னவன் தான் கொண்டு வந்திருந்த பிரகனென்சி டெஸ்ட் கிட்டை பற்றி அவனிடம் சொல்ல இருந்த நேரத்தில் "உண்மையிலேயே நீங்க கிரேட்டுங்க. தங்கச்சி மனசு கஷ்டப்படுதுன்னு இப்படி வாரத்துக்கு எட்டு முறை சமாதானத்துக்கு வரிங்களே.." என்று ஆச்சரியப்பட்டான் மதுரன்.

ஏனெனில் அவனுக்குதான் அக்கா தங்கை பாசம் என்பதெல்லாம் அன்னிய தேசத்து உணர்வாயிற்றே!?
சிரித்தபடி நிமிர்ந்தான் மித்ரன்.

அவனின் சிரிப்பு கண்டு மதுரனுக்கு குழப்பமாக இருந்தது.

"என் தங்கச்சி ஒரு பக்கம் அழறா. என் பொண்டாட்டி ஒரு பக்கம் புலம்புறா.. யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்தாதானே குடும்பம் நல்லா இருக்கும்.? நான் இறங்கி வந்து பேசுறதால என் தங்கச்சியும் என் பொண்டாட்டியும் நீங்களும் மன நிம்மதியா இருப்பிங்கன்னா நான் வந்து ஏன் பேசக்கூடாது.?" என்று கேட்டான்.

மதுரனின் புருவங்கள் முடிச்சிட்டன.

"அந்த சனியன் எதுக்காக ஃபீல் பண்ணுது.? திட்டம் போட்டுதானே என்னையும் என் பொண்டாட்டியையும் பிரிச்சது.?" என்று சிடுசிடுத்தான்.

அவனின் சிடுசிடுப்பு கண்டு மித்ரனுக்கு முகம் மாறி போனது.

"அவ எந்த திட்டமும் போடல.. அவ செஞ்சதெல்லாம் தப்புதான். ஆனாலும் நீங்களும் மித்ராவும் பிரிஞ்சி இருப்பதை நினைச்சி ரொம்ப பீல் பண்றா. தினமும் அதே புலம்பல்தான்.. என் தங்கச்சிக்காக வரேன்னு சொல்வதை விடவும் என் பொண்டாட்டியோட நச்சரிப்பு தாங்காமதான் உங்களை தேடி வரேன்னு கூட சொல்லலாம்.." என்று மித்ரன் சொல்லிக் கொண்டே போக, அதை நம்புவதற்குதான் மதுரனுக்கு மனமில்லை.

"என் பொண்டாட்டி ஒரு கண்ணாடி போல. நீங்க அன்பை காட்டினா அதை அந்த இரண்டு மடங்கா திருப்பி காட்டுவா. கோபத்தை காட்டினா அதே கோபத்தை இரண்டு மடங்கா திருப்பி கொடுப்பா. அவ ஒரு குழந்தையும் கூட. அவளை என்னால புரிஞ்சிக்க முடியுது.." என்று சொன்னான் அவன்.

மச்சான் சொல்வதைக் கேட்கும் போது சுவாரசியமாக இருந்தது மதுரனுக்கு.

"நீங்க அவளை பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு நினைச்சேன்.. அவ உங்களை ஆட்டி வைக்கிறான்னு நினைச்சேன்." என்றான் சிறு சந்தேகத்தோடு.

மித்ரனுக்கு சிரிப்பு வந்தது. "இல்லைங்க. பிடிச்சிதான் கல்யாணம் பண்ணேன். பார்த்த உடனே உள்ளுக்குள்ள ஏதேதோ ஃபீல் வந்தது.. இன்னும் சொல்லணும்ன்னா இந்த கல்யாணத்திலேயே அதிக சுயநலவாதி நான்தான்.." என்று சொன்னான்.

"என்னங்க இப்படி சொல்றிங்க.?" மதுரன் அதிர்ச்சியோடு கேட்டான்.

"உண்மைதாங்க சொல்றேன். எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். அதனாலதான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. குறும்புக்காரி. ஆனாலும் அவளோட மனசு வெள்ளை மனசு. உங்களுக்கும் அவளுக்கும் நடுவுல ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கு. நீங்க மித்ரா மேல வைத்திருக்கும் காதலை என்னால புரிஞ்சிக்க முடியுது. அதேபோலத்தான் நீலவேணி என் மேல வச்சிருக்கும் காதலையும் நான் புரிஞ்சி வெச்சிருக்கேன்.." என்றவன் தன் கால்சட்டை பாக்கெட்டிலிருந்த பிரக்னன்சி டெஸ்ட் கிட்ட கையில் எடுத்தான்.

அதை அவன் மதுரனிடம் காட்ட இருந்த நேரத்தில் அவனின் கைபேசி ஒளிர்ந்தது.

எடுத்துப் பார்த்தான். மித்ராவும் நீலவேணியும் கை கால்கள் கட்டி போடப்பட்டு நாற்காலி இரண்டில் பிணை கைதிகளாக வைக்கப்பட்டு இருந்த புகைப்படம் அவனின் கைபேசிக்கு வந்து இருந்தது.

அதிர்ச்சியில் கைபேசியை கீழே விட்டு விட்டான்.

மித்ரனின் முகத்தில் இருந்த அதிர்ச்சியை கண்டு விட்டு "என்ன ஆச்சு.?" என்று விசாரித்தான் மதுரன்.

அவசரமாக எழுந்து நின்ற மித்ரன் இடது கையால் நெற்றியை பிடித்தான்.

மூளை சட்டென்று செயல்பட மறுத்தது. பொறுமையாக இருக்க வேண்டும் என்று தனக்குள் நூறு முறை சொல்லிக் கொண்டான்.

கைபேசியை கையில் எடுத்து புகைப்படத்தை மீண்டும் பார்த்தான். இவனின் முகத்தில் இருந்த கலவரத்தைக் கண்டு சந்தேகம் கொண்ட மதுரன் மச்சானின் அருகில் வந்தான்.

அவனின் கைபேசியில் இருந்து புகைப்படத்தை கண்டதும் அவனுக்கும் அதிர்ச்சிதான் வந்தது.

"மித்ரா.." என்று பதட்டமாக அழைத்தான்.

"யாருங்க இப்படி பண்ணது.?" என்று மச்சானிடம் விசாரித்தான்.

"எனக்கும் தெரியலைங்க.." என்ற மித்ரனின் இதயம் பல மடங்காக துடித்துக் கொண்டிருந்தது.

புகைப்படத்தை அனுப்பிய எண்ணுக்கு அழைக்க முயன்றான். அதே நேரத்தில் அந்த எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.

அவசரமாக போனை எடுத்தான்.

"ஸ்பீக்கரில் போடுங்க.." என்று இறைஞ்சினான் மதுரன்.

மச்சானின் பேச்சைக் கேட்டு ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

"உன்னோட பொண்டாட்டியும் தங்கச்சியும் உனக்கு உயிரோடு வேணும்ன்னா நீ என் வீட்டுல இருந்து எடுத்து வந்த அத்தனை சாட்சியையும் என்கிட்ட ஒப்படைக்கணும். இல்லன்னா இவங்க இரண்டு பேரையும் பாரபட்சம் பாக்காம சுட்டு தள்ளிடுவேன்.." என்று மிரட்டினான் எதிர்முனையில் பேசியவன்.

அது அந்த சீரியல் கொலைக்காரன்தான் என்று இவனால் யூகிக்க முடிந்தது.
"நான் மறுபடியும் போன் பண்றேன். அதுக்குள்ள உன்கிட்ட இருக்கும் ஆதாரத்தை எல்லாம் ஒரு பேக்ல நிரப்பி வை. போலீஸ்க்கு போகணும்னு நினைச்சா.. இந்த இரண்டு பொண்ணுங்களும் பொணமாதான் உன் கைக்கு கிடைப்பாங்க.." என்று எச்சரிக்கை குரலில் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டான் எதிர்முனையில் பேசியவன்.

"என்ன ஆச்சி.?" மச்சானிடம் கேட்டான் மதுரன்.

விஷயத்தை இவனிடம் விளக்கி சொன்னான் இவன். அதைக் கேட்டு மதுரனுக்கு கோபம் வந்தது.

"இந்த சாதாரணமான கேஸ்ஸெல்லாம் எடுக்க மாட்டிங்களா.? எதுக்காக இப்படி முதல் கேஸ்லயே பஞ்சாயத்தை இழுத்து வச்சிருக்கிங்க.?" என்று உரிமையோடு கோபப்பட்டான்.

"வக்கீல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்தாங்க. பாவம் அந்த பையன். வாழ வேண்டியவன். அவன் மேல கொலை பழியை போட்டு இருக்காங்க.." என்று சோகமாக சொன்னான்.

"அவங்க கொலைப் பழியை போட்டா என்ன போச்சி.? நீங்க உங்களோட வாதாடும் திறமையால அவன் கொலை செய்யலன்னுதானே ப்ரூவ் பண்ணி இருக்கணும்.? அதை விட்டுட்டு சீரியல் கொலைக்காரன் வீட்டுக்கெல்லாம் போய் எதுக்காக ஆதாரம் எடுத்துட்டு வந்திங்க.? அட்லீஸ்ட் இதை போலிஸ்க்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்ல.? இரண்டு வாரமா அந்த கொலைக்காரன் திட்டம் போட்டு இவங்க இரண்டு பேரையும் கடத்தும் வரைக்கும் நீங்க என்னதான் பண்ணிக்கிட்டு இருந்திங்க.?" என்று கோபத்தோடு கேட்டான்.

"உங்க கோபம் புரியுது. டென்ஷன் ஆகாம இருங்க.. நம்ம யோசிக்கலாம்.." என்று மித்ரன் சொல்லவும் "என்னை விட ஒரு வயசு பெரியவங்களா போயிட்டிங்க.. இல்லன்னா அடிச்சி வாயை உடைச்சிருப்பேன். அங்கே பணைய கைதியா இருப்பது என் பொண்டாட்டி. நீங்க என்னடான்னா என்னை அமைதியாக இருக்க சொல்லி சமாதானம் சொல்லிக்கிட்டு இருக்கிங்க.." என்று கோபப்பட்டான்.

"அது என் தங்கச்சிங்க. எனக்கும் பயமாதான் இருக்கு.. ஆனா நாம கோபப்பட்டா மட்டும் அவங்க இரண்டு பேரும் இங்கே வந்துடுவாங்களா.? போலீஸ்க்கு போலாமா வோணாம்ன்னு தெரியல. இன்னும் மூணு நாள்ல செந்தில்நாதனோட வழக்கு கோர்ட்டுக்கு வரப்போகுது. இந்த ஆதாரத்தை எல்லாம் கொலைக்காரன்கிட்ட திருப்பி கொடுத்துட்டா அப்புறம் செந்தில்நாதனை காப்பாத்த முடியாது.. செத்தவன் பெரிய இடத்துப் பையன்.. இவனுக்கு தூக்கு தண்டனை வாங்கி தரணும்ன்னு வெறியா இருக்காரு செத்தவனோட அப்பா.." என்று கவலையோடு சொன்னான்.

"இவ்வளவு பேசுறவங்க ஆதாரத்தை கண்டுபிடிச்ச உடனே போலீஸ்க்கு சொல்லி இருக்க வேண்டியதுதானே.?" என்று மதுரன் எரிச்சலோடு கேட்க "சொன்னேன்ங்க.. காட்டு பங்களா.. இப்படி ஒரு கொலைக்காரன் இருக்கான். அந்த வீட்டில எல்லா ஆதாரமும் இருக்கு.. அப்படின்னு நாங்க சொன்னதும் போலிஸும் அங்க போனாங்க. ஆனா போலீஸ் போகும் முன்னாடியே அந்த வீட்டை கொளுத்தி விட்டு தப்பிச்சி போயிட்டான் அந்த கொலைக்காரன். அவனோட முகத்தை நாங்க யாருமே பார்க்கல. என்கிட்ட இப்போதைக்கு இருக்கிற சாட்சி செந்தில்நாதன் கொலை செய்யல, ஒரு தொடர் கொலைக்காரன் இதுபோல நிறைய கொலைகளை பண்ணிட்டு இருக்கான். இவ்வளவுதான்.. அவன் எங்களை விட்டு விடுவான்னு நினைச்சேன். ஏனா செந்தில்நாதன் கொலை செய்யலன்னு மட்டும்தான் நாங்க வாதாட இருந்தோமே தவிர முகம் தெரியாத அந்த கொலைக்காரனை கண்டுபிடிச்சி நிறுத்த நினைக்கல. ஏனா அது எங்களாலயும் முடியாதது.." என்று தனது நிலையை விளக்கி சொன்னான்.

மச்சானின் மனதும் அவன் எடுத்த முயற்சியும் இவனுக்கும் புரிந்தது.

இப்போதைக்கு என்ன செய்வது என்று இருவரும் யோசித்தார்கள்.

"நான் போலீஸ்க்கு போன் பண்ணட்டா.?" என்ற மதுரன் கேட்டதும் "இல்ல இருங்க. தங்கச்சியும் வேணியும் அவன்கிட்ட இருக்காங்க. நாம அவசரப்பட்டு போலீஸ்க்கு போனா அவங்களுக்கு ஏதாவது ஆயிடலாம்.. என்ன நடந்தாலும் அவங்க ரெண்டு பேர் மேலயும் தூசி கூட விழ கூடாதுன்னு நான் ஆசைப்படுறேன்.." என்றவன் தனது வீட்டிற்கு கிளம்பினான்.

மதுரனும் அவனோடு இணைந்து வந்தான். இருவரும் சேர்ந்து மித்ரன் கொண்டு வந்து வைத்திருந்த ஆதாரங்கள் அத்தனையும் பேக் ஒன்றில் நிரப்பினார்கள்.

கொலைகாரனின் போனுக்காக காத்திருந்தார்கள். நிமிடங்கள் அத்தனையும் மிகவும் கொடூரமான முறையில் கடந்து போயின.

தங்கைக்கும் மனைவிக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்று மனதோடு வேண்டிக் கொண்டான் மித்ரன்.

பிறகு நினைவு வந்தவனாக தன்னிடம் இருந்த பிரக்னென்சி கிட்டை எடுத்து மச்சானிடம் தந்தான்.

"என்ன இது.?" என்றவனிடம் "மித்ரா பிரக்னென்டா இருக்கா.." என்று சொன்னான்.

மதுரன் அதிர்ச்சியோடு தன் கையில் இருந்த கிட்டை பார்த்தான்.

தொடரும்
 
  • Love
Reactions: Anu
Back
Top