Oh, no! You don't have JavaScript enabled! If you don't enable JS, you're doomed. [Long explanation about how to enable JS in every browser ever made] டிராகனின்‌ கன்னிகை 6 | Sevanthi Durai Novels

Welcome!

கதை படிக்கலாம் வாங்க

SignUp Now!

sevanthi durai

Administrator
Joined
Mar 19, 2025
Messages
711
6

அதராவை இந்த முறை அழைத்து வந்த சிறைச்சாலை கொஞ்சம் குப்பையும் அழுக்குமாக இருந்தது. வேண்டுமென்றேதான் தன்னை இங்கே அடைக்கின்றார்கள் என்று அவளுக்கும் புரிந்து போனது.

மூன்று வேளைக்கு பதிலாக இரண்டு வேளைதான் உணவு கொடுத்தார்கள். அந்த உணவிலும் உப்பு உறைப்பே இல்லை. வேண்டா வெறுப்பாக சாப்பிட்டாள். ஆனால் ஏதோ ஒரு புண்ணியத்தில் தினமும் குளித்துக் கொள்ள அனுமதி தந்தார்கள். அந்த குளியல்தான் அவளை கொஞ்சம் புத்தியோடு வைத்திருந்தது.

இரண்டு நாட்கள் அப்படியே சென்றது. மூன்றாம் நாள் அவளை பார்க்க தீயொளி வந்தான்.

சிறை சாலையின் கம்பி கதவின் அருகில் வந்து நின்றான். அவனுக்கு பின்னால் இரண்டு வீரர்கள் லேசர் கன்களை ஏந்தியபடி அவனுக்கு பாதுகாப்பாய் நின்றார்கள். ஒரு சாதாரண காட்டன் சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தான். இவனை இளவரசன் என்று சொல்ல வேறு யாராவது வந்தால்தான் உண்டு.

அவனை கண்டதும் அதரா எழுந்து வந்தாள்.

அவளை ஏற இறங்க பார்த்தவன் "இப்ப என்ன சொல்ற?" என்று கேட்டான்.

"நான் ஏன் உங்களுக்கு பதில் சொல்லணும்?" என்று திருப்பி கேட்டாள் இவள்.

"உனக்கு பசிக்கலையா? நீ எனக்கு ஓகே சொன்னா நான் உனக்கு தட்டு நிறைய தங்க காசு தரேன்.." என்றான்.

"தேவையில்லை.." என்று சொல்லி தனது கைகளை கட்டினாள். இவன் பார்வை அவளின் நெஞ்சுக்கு இறங்கியது. சிறைச்சாலை அதிகாரிகள் ஒரு பழைய சுடிதாரை அவள் அணிந்து கொள்ள கொடுத்திருந்தார்கள். சுடிதாரின் கழுத்து பகுதி கொஞ்சம் கீழே இருந்தது. இவள் கையை கட்டியதும் அவ்விடம் இன்னும் கவர்ச்சியாக தெரிந்தது.

காவலாளிகள் புறம் திரும்பியவன் "வெளியே இருங்க.." என்று அனுப்பினான்.

அவர்கள் சென்ற பிறகு இவள் புறம் திரும்பியவன் "வேற என்ன வேணும்?" என்று கேட்டான்.

"சுதந்திரம்.." என்றாள் நேர்ப்பார்வை பார்த்து.

"நீ ஓகே சொன்னா உனக்கு இங்கே எந்த குறையும் இருக்காது.." என்றவனை தலை சாய்த்து பார்த்தவள் "சுதந்திரம்ன்னா என்ன தெரியுமா? பிடிக்காத விஷயத்தை செய்யாம இருப்பதும்தான்.." என்றாள் நக்கலோடு.

"அப்படின்னா பட்டினியா சாவு.." என்றவனை சிரிப்போடு பார்த்தவள் "செத்துட்டு போறேன்.." என்றாள் சாதாரணமாக.

இவன் குழப்பத்தோடு புருவம் நெரித்தான்.

கம்பி கதவின் மீது கைகளை ஊன்றினாள்.

"ஒரு பொண்ணுக்குதான் பொண்ணோட மனசு தெரியுமாம். அதுபோல ஒரு மனுஷனுக்குதான் மனுசனோட மனசு புரியும். ஒரு மிருகத்தோட ஆட்சியை என்னால ஏத்துக்க முடியாது.." என்று சிறு திமிரோடு சொன்னாள்.

இவனுக்கு கோபம் உச்சந்தலையில் ஏறியது. கதவை திறந்து அவளின் தலைமுடியை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்.

"ஒரு மிருகத்தை பத்தி சொன்னா உனக்கு ஏன்டா கோபம் வருது? நீ மனசால மிருகமா?" என்று கேட்டாள்.

"வாயை மூடு.." என்றவன் அந்த கோட்டையில் பின் பகுதிக்கு அவளை இழுத்து வந்தான்.

பெரிய மலைகளும் காடுகளும் அங்கே இருந்தன. அருகில் இருந்த சமவெளி பகுதியில் டிராகன்கள் சில நடமாடிக் கொண்டிருந்தன. சில டிராகன்கள் பறந்து கொண்டிருந்தன.

அவள் தேடினாள். அனைத்தும் நீல டிராகன்கள்தான். ஆனால் அன்று இவளை கடத்தி வந்த அந்த முட்டாள் டிராகன் இந்த கூட்டத்தில் இல்லை.

இவளை பார்த்ததும் ஒரு குட்டி டிராகன் முன்னால் வந்தது. இவள் பயந்து தீயொளியின் பின்னால் ஒளிந்தாள்.

"இப்ப ஏன் பயப்படுற?" என்று நக்கலாய் கேட்டான் தீயொளி.

அவனின் முகத்தைப் பார்த்தாள் அதரா. கண்கள் நான்கும் சந்தித்துக் கொண்ட பொழுதில் அவனின் இதயம் பலவீனமாய் துடித்தது.

"மிருகத்தைப் பார்த்தா யாராயிருந்தாலும் பயப்படுவாங்க.." என்று பற்களை கடித்தபடி சொன்னாள் அதரா.

அவனுக்கு இவளின் திமிரும் தெனாவட்டும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. சுதந்திர நாட்டு மனிதர்கள் அனைவரும் டிராகன்களின் ஆட்சிக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தான். இவள் என்னவென்றால் டிராகனை வெறுக்கின்றாள்.

அந்த டிராகன் இவளை சிறு ஆச்சரியத்தோடு பார்த்தது.

"இவங்க மிருகங்கள் கிடையாது கடவுள்கள். மனிதர்களை ஆட்சி செய்ய வந்த கடவுள்கள்.." என்று சொன்னான் தீயொளி.

"கடவுள்கள்ன்னு யாரும் கிடையாது. நான் படிச்சிருக்கேன். நாயோட கண்ணுக்கு நாம மனுஷங்களா தெரிவோம். பூனையோட கண்ணுக்கு நாம ஒரு பெரிய பூனையா தெரிவோம்.‌ நாமளும் அந்த பூனை மாதிரிதான். இந்த இயற்கையை மனுஷனுடைய ரூபமா பார்த்து கடவுளை உருவாக்கிட்டோம். ஆனா அந்த இயற்கையை கூட கடவுள்ன்னு ஏத்துக்காத ஆள் நான்.‌ இந்த மிருகத்தை கடவுளா ஏத்துப்பேனா?" என்று கேட்டாள்.

தீயொளிக்கு அவள் பேசப் பேச ஆச்சரியம் கூடியது. திமிராக இருந்தாலும் கொஞ்சம் அருமையாய் வாதாடினாள்.

"என்னை ஒழுங்கா என்னோட நாட்டுக்கு அனுப்பி வை. அதுதான் உனக்கு நல்லது. இல்லாட்டி இளவரசன்னு கூட பாக்காம உன்னோட முகத்தை உடைச்சி வெச்சிடுவேன்.." என்று மிரட்டினாள்.

அங்கிருந்த டிராகன் இவள் சொன்னதில் கோபமாகி விட்டது. தனது வாயை திறந்து நெருப்பை கக்கியது.

அது கொஞ்சம் சின்ன டிராகன் என்பதால் அதன் நெருப்பும் கொஞ்சம் குறைவாகவே வெளிவந்தது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த தீயொளி நெருப்பு இவளின் முகத்தை தொடும் முன்னால் தனது கையை நீட்டி மறித்து நெருப்பை தடுத்தான்.

நெருப்பு தன்னை சுட வரவும் பயந்து முகத்தை மூடியபடி குனிந்த அதரா நெருப்புத் தன்னை தீண்டாமல் போகவும் சிறு ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்தாள். தீயொளி தன்னை பாதுகாப்பது அவளுக்கு புரிந்தது.

அவள் அதிர்ச்சியோடு அவனை பார்த்த நேரத்தில் அந்த குட்டி டிராகன் தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டது. நெருப்பைக் கக்குவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து பறந்து போனது.

"ஐயோ நெருப்பு சுட்டுடுச்சா?" என்று கேட்டு பதறியபடி அதரா அவனின் கையைப் பிடித்தாள்.

அவனின் கைக்கு எதுவும் ஆகி இருக்கவில்லை.

இவள் குழப்பத்தோடு அவனின் முகத்தை பார்த்தாள். "ஏன் உனக்கு எதுவும் ஆகல?" என்று கேட்டாள்.

"ஏனா நான் கடவுள்.." என்றான்.

அவனின் கையை தள்ளி விட்டாள் இவள்.

"கலர் மாறும் பச்சோந்தி, ஷாக் கொடுக்கும் மீன் வகை, அமீபா டூ ஆணோட விந்தில் உருவாகும் குட்டி குட்டி உயிரணு வரை எல்லாமே இங்கே ஏதாவது ஒரு அதிசயத்தை தனக்குள்ள வச்சிருக்கு. அதுக்காக அது கடவுளாகிடுமா? உயிரை உருவாக்குவதால் ஆண்களும் கடவுள் கிடையாது. ஒரு அணுவை குழந்தையா மாத்துவதால் பெண்களும் கடவுள் கிடையாது. எல்லாமே இயற்கையின் படைப்பு. உனக்கு கையில நெருப்பு படலன்னா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். கடவுள்ன்னு உலறாத. உன்னோட உளறலை கேட்க எனக்கு இஷ்டம் கிடையாது.." என்று சொன்னாள்.

இவனின் இதயம் விழுந்து கொண்டே இருந்தது. இம்ப்ரஸ் ஆகிக்கொண்டே இருந்தான்.‌ ஒரு பெண் வெறும் பேச்சால் தன்னை மயக்குவாள் என்று இவன் கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

"நான் எப்ப என்னோட நாட்டுக்கு போவேன்?" என்று கேட்டாள்.

"அங்கே ஆபத்து அதிகம்.." என்று சொல்லிவிட்டு கோட்டையை நோக்கி நடந்தான்.

இவள் வானத்தில் வட்டமிட்ட டிராகன்களை பார்த்துவிட்டு இவன் பின்னால் ஓடி வந்தாள். "ஒரு உயிரோட வேலை போராடுவது. என்னோட ஆபத்தை என்னால சமாளிக்க முடியும். நீ எனக்காக ஒன்னு வருத்தப்படாதே. இங்கே ஜெயில்ல இருக்குறதுக்கு பதிலா நான் அங்கே சுதந்திரமா சண்டை போட்டுட்டு போயிடுவேன்.." என்று சொன்னாள்.

"நீ என்னோட கைதி. என்னால உன்னை விட முடியாது.." என்று சொல்லிவிட்டு தொடர்ந்து நடந்தான்.

"எனக்கு இங்க பிடிக்கவே இல்லை.." என்று சொல்லியபடி பின்னால் ஓடி வந்தாள்.

நடப்பதை நிறுத்தியவன் இவள் புறம் பார்த்து "வாயை மூடலன்னா உன்னை டிராகனுக்கு இரையா போட்டுடுவேன்.." என்று மிரட்டலாய் சொன்னான்.

அவன் சொன்னதில் மிரண்டு விட்டாள். அவளின் பயத்தை பார்க்க இவனுக்கு பிடித்திருந்தது.

"உன் மூஞ்சை பார்ப்பதற்கு பதிலா நான் ஜெயில்லையே இருக்கேன்...‌" என்று சொல்லிவிட்டு அவனை தாண்டி ஓட முயன்றாள்.

இவன் அவளை ஓட விடாமல் கையைப் பிடித்தான். அவனின் திடீர் செய்கை காரணமாக தடுமாறினாள்‌. அவன் தன் கையை இழுத்தான். அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள். அவனை திடீரென்று நெருங்கி விடவும் அவளுக்கு இதயம் படபடத்தது.

"என் மூஞ்சில அப்படி என்ன குறை இருக்குன்னு சொல்லிட்டு போ.." என்று ஆர்டர் போட்டான்.

இவள் அவன் முகத்தை ஆராய்ந்தாள். நிறையவே அழகுதான். ஆனா எனக்கு பிடிக்கலையே என்று மனதுக்குள் நினைத்தவள் "உன் மூஞ்சில முக்கால் கிலோ திருட்டுத்தனமும் பத்து கிலோ கேப்மாரித்தனமும் தெரியுது.." என்றாள்.

இவன் அதிர்ந்து நிற்க, தன் கையை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாய் ஓடினாள்.

தொடரும். இந்த எபிசோட் பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க நட்புகளே 🥰
 
Back
Top